திருக்கோணேஸ்வர நூல்கள்
திருக்கோணாசல வைபவம்
இந் நூல் திருகோணமலை ௵மான் வே. அகிலேசபிள்ளை அவர்களால் 1889 ஆம் ஆண்டில் சத்தியரூபமாக இயற்றப்பட்டது.திருக்கைலாச மலையிலே சிவபெருமான் அன்ந்தகோடி சூரியப் பிரகாசமுள்ள சிங்காசனத்தின் மேலே தமது அருட்சக்தியாகிய உமாதேவியாரோடு இடப வாகனத்தின் மேல் வீற்றிருந்தருளியிருக்கிறார்.
அப்போது பிரமா, விட்டுணு, இந்திரன் முதலிய தேவர்களும், கணநாதர்களும் சிவபெருமான் முன்பு வந்து, அட்டாங்கமும் பூமியிற்றோயும்படி விழுந்து திருப்பாதங்களை நமஸ்கரித்து எழுந்து நின்றார்கள்.
சிவபெருமான் அவர்கள் மீது திருவிழிக் கடை பரப்பி அனுக்கிரகம் பாலித்தார்.
அதன் பின்பு சிவபெருமான் சகல தேவர்களையும் நோக்கி, தேவர்களே! பிரமாவுக்கு படைத்தற் றொழிலையும், விஷ்ணுவுக்கு காத்தற் றொழிலையும், உருத்திரனுக்கு அழித்தற் றோழிலையும் ஆதிசேடனுக்கு பூமியை தாங்கும் தொழிலையுங் கொடுத்தோம் என்று சொல்லியருளினார்.
முழு நூலையும் தரவிறக்கம் செய்ய
கோணேசர் கல்வெட்டு
'கோணேசர் கல்வெட்டு' என்கின்ற இந்த வரலாற்று நூல், திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர் இராஜவரோதயம் அவர்களால் 16 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது பாடல்களையும் , உரைநடைப்பகுதிகளையும் கொண்டமைந்திருக்கிறது.அந்த நாட்களில் அரசர்கள் தங்களது திருப்பணிகள், கட்டளைகள் போன்றவற்றை சாசனங்களாகக் குறித்து வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட சாசனத்தை ஆதாரமாகக்கொண்டு இலக்கியங்கள் உருவாக்கப்பட்டால் அது 'கல்வெட்டு' என அழைக்கப்பட்டது.
திருக்கோணேச்சர ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்த குளக்கோட்டு மன்னன், ஆலயம் பற்றியும், அதனை நிர்வகிப்பது பற்றியும்,கோயிற்தொழும்பாளர்கள் கடமைகள் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கி 'பெரியவளமை பத்ததி' என்னும் செப்பேட்டில் பொறித்து வைத்திருந்தார். அச்சாசன விடையங்களை அடிப்படையாக வைத்து அதைத் தொகுத்தும்,விரித்தும் கவி இராஜவரோதயரால் உருவாக்கப்பட்டதுதான் கோணேசர் கல்வெட்டு.
இந்நூல் மூலம் திருக்கோணேச்சரத்தின் வரலாறு, அவ்வாலயத்துக்கு குளக்கோட்டு மன்னன் செய்த திருப்பணிகள்,திருகோணமலை வன்னிமைகள் பற்றிய செய்திகள்,அக்காலத்து திருகோணமலைச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்கள் என்பனவற்றைப் பற்றி நாம் அறியக்கூடியதாக இருக்கிறது.
முக்கியமாக கோயில் தொழும்பு செய்வோர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் ,அவர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள், கோணேசர் ஆலயத்துக்குரிய திரவிய இருப்பு என்பன பற்றி விரிவாகச் சொல்கிறது இந்நூல். திருகோணமலையின் வரலாற்றுத் தொன்மைக்கான ஆதாரங்களில் இந்நூல் முக்கிய இடம்வகிக்கிறது.
நன்றி - geevanathy.blogspot.com