அருணகிரி நாதர் அருளிய திருகோணமலைத் திருப்புகழ்
தனத்த தானன தனத்தான தானன
தனத்த தானன தனத்தான தானன
தனத்த தானன தனத்தான தானன தனதான
விலைக்கு மேனியி லணிக்கோவை
மேகலை தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ மயலூறி
பொழிப்புரை:
உடலைவிற்று வாழும் பெண்கள் தங்கள் உடம்பில் ஆடைகள் அணிந்து அணிகலன்கள் பூண்டு மேகலை என்று சொல்லப்படுகிற ஒட்டியாணம் கட்டி உடம்பை அழகுபடுத்தி மினிக்குகின்றார்கள். அவர்களுடைய காம இச்சையில் மயங்கினேன்.
மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு கொடியேனைக்
பொழிப்புரை:
அந்தக் காம மயக்கத்தினால் என்னை இந்த பூமியில்லுள்ளவர்கள் இவனும் ஒரு காமியென என் கண் முன்னே நின்று இகழவும் நான் அவமானத்தை புறந்தள்ளி இந்த உடம்பின் காமவேட்கையால் மீண்டும் காமதாகந் தணியாத கொடியவனானேன்.
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே
பொழிப்புரை:
காம கலக்கத்தினால் மலஞ்சோறும் இந்த உடம்பின் மிகுந்த நோய்களுக் காளாகித் தவிக்காமல், உன்னைக் கவிமாலையால் போற்றித் துதிக்கும் என்னை ஈடேறச் செய்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வுடையவனே!
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்
பொழிப்புரை:
மேலான மோட்சகதி அருளுகின்ற தலைவனாகிய கோனேசப் பெருமானே! உன்னை தேடிதேடி உன்புகழையே பாடுகின்ற நாயிற் கடைப்பட்ட என்னையும் உனது அருட்பார்வையாகிய கருனையினால் உன் திருவடிப் பேறடைவதற்கு அருள் புரிய வேண்டும்.
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே
பொழிப்புரை:
தென்கயிலை மலையின் தலைவனாகிய உன்னையே இச்சித்துத் சிவகாமியா யமர்ந்துள்ள மாதுமையாளின், திருக்குமரனாகிய ஆறுமுகங் கொண்ட சண்முக தேசிகனே! அழகிய வடிவுடைய குறமகளாகிய வள்ளி அம்மையாருக்கு இன்பத்தை தருகின்றவனே!.
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே
பொழிப்புரை:
வசிட்டர், காசிபர், தவப்பேறுடைய யோகியர்கள், அகத்திமா முனிவர், இடைக் காட்டுச் சித்தர், நக்கீரன் என்பவர்கள் பாடிய பாக்களின் தத்துவப் பொருளையே திருமேனியாக கொண்டு எழுந்தருளுகின்ற முருகபெருமானே!.
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே
பொழிப்புரை:
நான்கு வேதங்களையும் நிலைக்கச் செய்கின்ற மேலான அந்தணர்கள், திருகோணமலைத் தளத்தில் உயர்ந்து விளங்கும் கோபுர வாசலின் நின்று பாடும் அனுபூதிப் பாடலின் பொருளாக விளங்கி வருகின்றவனே!
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே.
பொழிப்புரை:
புண்ணிய பாவங்களுக்கேற்ப நிகளுகின்ற ஏழு பிறப்புக்களையும், தனது திருக்கரத்திலேந்திய, கடல் கோள் போன்று அழிக்கும் ஒப்பற்ற வல்வேலினால் பொடிப் பொடியாகும்படி செய்து, நினைத்த காரியங்கள் எல்லாம் அனுகூலமாக முடியும்படி அருள்புரிகின்ற பெருமாளே!.