திருஞானசம்பந்தர் அருளிய திருக்கோணமலைத் திருப்பதிகம்
1
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.
சிவபெருமானின் வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்கின்றன. அவர் பாம்பணிந்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். திருநீறு அணிந்த திருமேனியர். மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபக்கொடி உடையவர். சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
2
கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே.
விரைவாகப் பாய்ந்து வந்த யானையின் தோலை உரித்துத் திருமேனிமேல் போர்த்திக் கொண்டவர் சிவபெருமான். அவர் பெண் யானை போன்ற நடையை உடையவளாய், வளையல்களை அணிந்தவளாய்ப் பிறை போன்ற நெற்றியையுடைய உமா தேவியை ஒரு பாகமாக உடையவர். பிறர் கொடிது என்று அஞ்சத்தக்க அலைகளையுடைய ஒலிக்கின்ற கடல், முத்துக்களைச் சுமந்து மக்களுக்கு வழங்கும் வளமைமிக்க திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
3
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேல்
தனித்தபே ருருவ விழித்தழ னாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.
சிவபெருமான் குளிர்ச்சியான இளமையான சந்திரனையும், பசுமையான தலையையுடைய பாம்பையும், படர்ந்த சடைமுடியில் அணிந்துள்ளார். கனிபோன்ற சிவந்த வாயையுடைய உமாதேவியைச் சிவபெருமான்ஒரு பாகமாக உடையவர். மேரு மலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு, அக்கினியைக் கணையாகக் கொண்டு முப்புரத்தை அழித்த ஆற்றலுடையவர். அப்பெருமான் ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த திருக் கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.
4
பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர்
தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து
கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமா மலையமர்ந் தாரே.
இறைவர் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியின் வேகத்தைக் குறைத்து அதனைச் சடையில் தாங்கியவர். அழகிய மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்தவர். பின் அவன் தேவி வேண்ட அவனை உயிர்ப்பித்து அவளுக்கு மட்டும் தெரியும்படி அருள்செய்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். தாமரை போன்ற திருவடிகளை உடையவர். ஆரவாரத்துடன், செழுமையான முத்துக்கள், செம்பொன், இப்பி இவற்றைத் திரளாக அலைகள் கரையிலே சேர்க்கத் திருக்கோணமலை என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
5
தாயினு நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.
தாயைவிட நல்ல தலைவர் என்று அடியார்கள் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடுவர். அவர் அடியார்களின் வாயிலும், மனத்திலும் நீங்காத மாண்புடையவர். பல கோலங்களை உடையவர். தம்மை வழிபடும் தொழிலுடைய அடியவர்கள்பால் நோய், பிணி முதலியன தாக்காவண்ணம் காப்பவர். மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். இவ்வுலகில், திருக்கோயிலும், சுனையும் கடலுடன் சூழ விளங்கும் திருக்கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
6
பரிந்துநன் மனத்தால் வழிபடுமாணி தன்னுயிர் மேல்வரும் கூற்றைத்
திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா ளுடையார்
விரிந்துயர் மௌவன் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமா மலையமர்ந் தாரே.
பக்தி பெருகும் நல்ல மனத்தால் அன்பு பெருக வழிபடும் மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனை, இறை வழிபாடு வினைப்பலனைச் சாராமல் காக்கும் என்ற சைவக் கொள்கைக்கு முரண்படாவண்ணம் உதைத்துப் பாலனுக்கு அருள் புரிந்த செம்மையான திறமுடையவர் சிவபெருமான். ஆன்மாக்கள் ஆகிய நம்மை ஆட்கொள்பவர். அப்பெருமான் விரிந்துயர்ந்த மல்லிகை, மாதவி, புன்னை, வேங்கை, செருந்தி, செண்பகம், முல்லை ஆகியவை விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.
7
கிடைக்கப் பெறவில்லை
8
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே.
கயிலைமலையை எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவர் சிவபெருமான். பின் அவன் ஏத்திப் போற்ற விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவர். செல்வத்தோடு கூடிய பிறப்பும், இறப்பும் அறியாதவர். சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவர். வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக வைத்தவர். உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னருட் பெருமையும், வாழ்வும் கொடுத்தவர். அத்தகைய பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.
9
அருவரா தொருகை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரு மறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே.
அருவருப்பு இல்லாமல் பிரமனின் வெண் தலையைக் கையிலேந்தி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்று உண்ணும் பெருமையுடையவர். சீர்மை பொருந்திய பெருங்கடலில் துயில்கொள்ளும் திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் அறியா வண்ணம் ஒளியுடைய பெரிய நெருப்புப் பிழம்பாய் உயர்ந்து நின்றவர். திருமால் சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சிக்க, ஒரு பூக் குறைய, அதற்காகத் தாமரை போன்ற தம் கண்ணையே இடந்து அர்ச்சனை செய்யக் குருவாய் விளங்கியவர். அடியவர்கள், ஒலிக்கின்ற வீரக்கழல்கள் அணிந்த தம் திருவடிகளை வணங்கும் வண்ணம் திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.
10
நின்றுணுஞ் சமணுமிருந்துணுந் தேரு நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே.
நின்றுண்ணும் சமணர்களும், இருந்துண்ணும் புத்தர்களும் சிவபெருமானைப் பற்றி நெறியல்லாதவனவற்றைப் புறங்கூறுகின்றனர். சிவபெருமானோ நஞ்சுண்டு தேவர்களைக் காத்த பெருமையுடையவர். மெல்லியலான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். கடல் சூழ்ந்த அம்மலையில் மணம் வீசும் மல்லிகைச் சோலை விளங்கக் கடலலைகள் கரையில் மோதுகின்றன. கடற்சோலைகளின் மணம்வீசும் திருக்கோணமலையில் சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்றார்.
11
குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.
குற்றமில்லாத குடிமக்கள் வாழ்கின்ற ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த திருக்கோணமலையில் வீற்றிருந்தருளும் சிவ பெருமானை, கற்றுணர் ஞானமும், கேள்வி ஞானமும் உடைய சீகாழி வாழ் மக்களின் தலைவரான சிவஞானக் கருத்துடைய ஞானசம்பந்தர் செந்தமிழில் அருளிய இப்பதிகத்தை உரைப்பவர்களும் கேட்பவர்களும் உயர்ந்தோர் ஆவர். அவர்களுடைய சுற்றத்தாரும் எல்லா நலன்களும் பெற்றுத் தொல்வினையிலிருந்து நீங்கப் பெறுவர். சிவலோகத்தில் பொலிவுடன் விளங்குவர்.