திருக்கோணேஸ்வர ஆலய சிறப்பு
இறைவர் திருப்பெயர் - திருக்கோணேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் - மாதுமையாள்
தல மரம் - கல்லால மரம்
தீர்த்தம் - பாவநாசம்
வழிபட்டோர் - இராவணன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தேவாரப் பாடல்கள் - சம்பந்தர்
உலகப்புகழ் பெற்ற திருக்கோணமலை மாவட்டத்தில் அறுபதுக்கும் அதிகமான சைவக்கோயில்கள் உள்ளன.
சைவம் கமழும் தமிழ்த் திருநாமங்கள் தாங்கிய பழைய ஊர்களில் செந்நெல்லும், கரும்பும், தென்னையும் செழித்து வளருகின்றன.
மிகப்பழைய காலத்து, இதிகாச நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றன என்பதற்கு நிரம்பிய ஆதாரங்கள் இங்கே உள்ளன.
குளக்கோட்டு மன்னன் செய்த தொண்டுகள் பலவற்றின் சுவடுகள் இன்றும் அறியக் கூடியனவாயுள்ளன.
இங்கே எங்கு நோக்கினாலும் சைவத் தமிழ்ப் பெயர்களே கேட்கின்றன.
இன்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கோணேஸ்வரம் தேவாரம் பெற்ற திருத்தலமாக ஒளிவீசியது.
பாண்டியன் திருக்கோணமலையில் 'இணைக்கயல்' பொறித்துள்ளமை வரலாற்றுப் பெருமையாகும்.
ஐம்பொன்னாலான அழகு மிக்க மூர்த்தங்கள் இருக்கும் மண்டபம் - தேவ மண்டபம், கண்கொள்ளாக்காட்சி தருவதாகும்.
பறங்கியருக்குப் பின் ஆங்கியேர் காலத்தில் கிடைத்த வழிபாட்டு அனுமதியின்போது நடைபெற்ற மலைபூசை ஆகாச வெளியில் இன்றும் நடைபெற்று வருகின்றது.
நாடொறும் ஆறுகால பூசை ஆகம விதிகளின்படி தவறாமல் நடைபெறுகின்றன.
திருக்கோணேசப் பெருமானின் விழாக்களில் வெளிவாரியாக நடைபெறுவது ஆடி அமாவாசை விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்கு பெருமான் எழுந்தருளும்போது, நகரிலுள்ள ஆலயங்களின் மூர்த்திகளும் தீர்த்தமாட அங்கே எழுந்தருளுவார்கள்.
ஆடி மாதம் போலவே, மகாமகத் தீர்த்த விழா, பங்குனி மாதத்தில் பூங்காவன மற்றும் தெப்பத் திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நவராத்தி நாட்களில் ஸ்ரீ சக்ரபூஜை வெகுசிறப்பாக நடைபெறுகிறது.
ஆதிகோண நாயகர் திருக்கோயில் கற்கோயிலாகும்.
திருக்கோணேஸ்வரத்தின் தொல்புகழ் பாடும் தேவாரம், திருப்புகழ் தவிர பல புராணங்களும், பிரபந்தங்களும், கல்வெட்டுச் செய்திகளும் உள்ளன.